தமிழகத்தில் 102 புதிய பள்ளிக் கட்டடங்களை முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.17.72 கோடி மதிப்பிலான பள்ளிக் கட்டடங்களையும், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திருச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், அரியலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிக் கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். மொத்தம், ரூ.157.19 கோடி செலவில் கட்டப்பட்டிருந்த 102 பள்ளிக் கட்டடங்கள் திறக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment