குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளைத் தமிழக அரசு மூடப்போவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன. ஆனால், அப்படி இல்லை என்று அரசு மறுக்கிறது. உண்மையில், 15-க்கும் குறைவாக மாணவர்களின் எண்ணிக்கை உள்ள அரசுப் பள்ளிகளை மூடிவிட வேண்டும் என்று மாநிலங்களைப் பணித்திருக்கிறது நிதி ஆயோக். இதற்குப் பணியாமல், அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கும் வகையில், மாற்றுக் கொள்கையை உருவாக்க வேண்டிய தமிழக அரசோ தன் கடமையிலிருந்து தவறுகிறது.
தற்போது தமிழகத்தில் 3,400 அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அந்தப் பள்ளிகளை மூடிவிட மத்திய அரசு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதையும் மத்திய அரசு நிறுத்தியுள்ளது. மத்திய அரசின் இம்முடிவை அமலாக்க தமிழக அரசும் முடிவுசெய்துள்ளது. ஒரு மாணவர்கூட இல்லை என்ற காரணத்தைக் காட்டி ஏற்கெனவே சில பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.
குறையும் எண்ணிக்கை
தமிழகத்தில் பழங்குடி மக்கள் பள்ளி, ஆதி திராவிட நலப் பள்ளிகள், கள்ளர் பள்ளிகள் (மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் செயல்படுபவை) என மூன்று வகையான அரசுப் பள்ளிகளும் பொதுவான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் உள்ளன. அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவருகிறது. 2008-2009 கல்வியாண்டில் மலைவாழ் மக்கள் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 42,867. 2017-2018-ல் இந்த எண்ணிக்கை 27,652 ஆகக் குறைந்தது. கடந்த 10 ஆண்டுகளில் ஆதி திராவிட நலப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 2,08,200 ஆக இருந்தது, 2017-18ல் 1,06,390 ஆகக் குறைந்துவிட்டது. அரசின் தொடக்கப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பொதுவான ஆரம்பப் பள்ளிகளிலும் 2008-09 முதல் 2012-13 வரையில் மாணவர்களின் எண்ணிக்கை 10.93% குறைந்திருக்கிறது. தனியார் பள்ளிகளில் 10.90% அதிகரித்திருக்கிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதைத் தடுப்பதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல பிரச்சினை. இந்த விவரங்களைக்கூட சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அறிக்கைகளில் அரசு குறிப்பிடுவதில்லை. 2019 நிதிநிலை அறிக்கையில்கூட 3,400 பள்ளிகள் மூடப்படும் நிலையில் இருப்பதைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. அந்தப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை பற்றியும் குறிப்பிடப்படவில்லை.
இப்படியான ஒரு சூழலில், மாணவர் எண்ணிக்கை குறைவதைத் தடுப்பதுடன், மாணவர் சேர்க்கையை அதிகரித்திருக்கும் அரசுப் பள்ளிகளும் நம்மிடையே உண்டு. அதைச் சாதித்திருப்பவர்கள் அர்ப்பணிப்பு கொண்ட ஆசிரியர்கள்தான்.
ஒத்தக்கடை
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை கிராமத்தில், 1930-ல் தொடங்கப்பட்ட ஆரம்பப் பள்ளி அது. ஒத்தக்கடை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அப்போது இந்த ஒரு அரசுப் பள்ளிதான் இருந்தது. 1970-களில் பல தனியார் பள்ளிகள் இந்த ஊரில் ஏற்படுத்தப்பட்டன. நாளடைவில் இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கின. ஒருகாலத்தில் 500 மாணவர்களுக்கு மேல் பயின்றுவந்த இந்தப் பள்ளியில் 2010-ல் சேர்ந்திருந்த மாணவர்கள் 326 பேர்தான். இந்தச் சூழலில், தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார் மு.தென்னவன்.
மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஊராட்சி மன்றத் தலைவரை அணுகினார். கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் பரமசிவம், தங்கள் ஊரின் பள்ளி மேம்பாடு பற்றி தீர்மானம் கொண்டுவரச் செய்தார். ஊர் மக்கள் ஆதரவோடு கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி பள்ளிக்கு 10 கணினிகள் வாங்கப்பட்டன. இதை ஊக்குவிக்கும் வகையில் சில அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் உதவினார்கள். மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பதற்குத் தேவைப்பட்ட எல்இடி தொலைக்காட்சி கிடைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்தார்.
தங்கள் குழந்தைகள் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர்கள் அவர்களைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்த தலைமையாசிரியர், அரசுப் பள்ளியில் சிறப்பு ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்தார். மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துகொண்டிருந்தபோது, அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், அதை ஏற்றால் இடம் மாற வேண்டியிருக்கும்; மாணவர்களைச் சேர்க்கும் பணி தடைபட்டுவிடும் என்பதால், பதவி உயர்வை ஏற்க மறுத்துவிட்டார். இன்றைக்கு அந்தப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 526.
கீச்சாங்குப்பம்
நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கிவரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அது. அப்பள்ளியில் 425 மாணவர்கள் பயின்றுவந்தனர். 2004-ல் சுனாமி ஏற்படுத்திய பேரழிவில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 610 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 80 குழந்தைகளும் அடங்குவர். பள்ளிக் கட்டிடமும் முழுமையாக இடிந்துவிட்டது. நகரத்தில் தற்காலிகமாக இயக்கப்பட்டு வந்த இந்தப் பள்ளி 2008-ல் கீச்சாங்குப்பத்தித்தில் ஒரு தொண்டு நிறுவனம் கட்டிக்கொடுத்த புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. எனினும், இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. 2013-ல் 92 பேர் மட்டுமே பயின்றனர். இத்தகைய சூழலில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற இரா.பாலு, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கப் பல்வேறு முயற்சிகளில் இறங்கினார். பள்ளி மேம்பாட்டுக்கு உதவ, பெற்றோர் - ஆசிரியர் அமைப்புக் கூட்டத்தில் ஊர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மாவட்ட நிர்வாக உதவியைப் பெற்று வகுப்பறைகளுக்கு ‘டைல்ஸ்’ போடுவது உள்ளிட்ட முயற்சிகளையும் மேற்கொண்டார்.
எல்லா வகுப்புகளிலும் கணினிக் கல்வி தொடங்கப்பட்டது. பெற்றோர்களின் எதிர்பார்ப்புக் கிணங்க எல்கேஜி, யுகேஜி வகுப்புகளும் தொடங்கப்பட்டன. இந்த முயற்சிகளின் பலனாக, மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 446 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்தப் பள்ளியில் 13 நிரந்தர ஆசிரியர்களும், 3 மாற்றுப்பணி ஆசிரியர்களும், 3 பகுதி நேர ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர். மாவட்டத்தில் சிறந்த பள்ளி என்ற விருதில் தொடங்கி, காமராஜர் விருது, குடியரசுத் தலைவர் விருது வரையில் பல விருதுகள் இப்பள்ளிக்குக் கிடைத்திருக்கின்றன.
அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து வந்ததைத் தடுத்ததோடு, அந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருப்பதற்கு இன்னமும் பல உதாரணங்கள் உண்டு. நம்பிக்கையளிக்கும் அந்த எடுத்துக்காட்டுகளைப் பின்பற்றி அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும். தவறினால், பழங்குடி, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் ஏழைக் குழந்தைகளுடைய கல்வியைக் கேள்விக்குறியாக்கிய பொறுப்பை அரசு ஏற்க வேண்டியிருக்கும். அரசுக்கு இருக்கும் அதே பொறுப்பு ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. மாணவர்களின் கல்வி சிறக்க, அர்ப்பணிப்புடன் அவர்கள் பணியாற்றினால், இந்தப் பணிகளுக்குப் பொதுமக்களும் துணை நின்றால் நம் மாணவர்களின் எதிர்காலம் மிகச் சிறப்பானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!
- ஜி.ராமகிருஷ்ணன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்,
No comments:
Post a Comment