ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர் திடீரென உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வடக்கு அழகு நாச்சியார் புரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் சிவா (29). இவரது மனைவி ஈஸ்வரி. திருமணமாகி 6 மாதம் ஆகிறது. ஈஸ்வரி தற்போது அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். தொடக்கப்பள்ளி ஆசிரியரான சிவா, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் நண்பர்களுடன் தங்கி மணமேல்குடி ஒன்றியம் கூம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் மணமேல் குடி வட்டக்கிளை உறுப்பினராகவும் இருந்தார். இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ நடத்திய போராட்டத்தில் ஆசிரியர் சிவா உள்ளிட்ட 77 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அந்த உத்தரவை அரசு ரத்து செய்ததை அடுத்து, அவர் மீண்டும் பள்ளிக்கு சென்று பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜாக்டோ ஜியோ நடத்திய போராட்டத்தில் சிறை சென்றதாலும், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதாலும் ஆசிரியர் சிவா மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆசிரியர் சிவாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை நாகுடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிவா உயிரிழந்தார். ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர் மனஉளைச்சலில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment