தமிழக பள்ளிகளில் கடந்த 24 ஆண்டுகளாக விளையாட்டு வகுப்புகளுக்கான உடற்கல்வி பாடப் புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.
முறையான பாடத்திட்டமும், பாடநூல்களும் இல்லாததால் பள்ளிகளில் தாங்கள் விளிம்புநிலை மனிதர்களாகவே பார்க்கப்படுவதாக, உடற்கல்வி ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் ஒரு கோடியே 35 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் வகுப்புகள் ஒதுக்கப்பட்டு இருப்பதுபோல், விளையாட்டுப் பிரிவுக்கும் வாரத்துக்கு 2 வகுப்புகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.
இந்த விளையாட்டுப் பிரிவுகளின் போது, மாணவர்கள் மைதானங்களுக்கு சென்று கூடைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடுவது வாடிக்கை.
1975-இல் கட்டாயப் பாடம்: இந்த விளையாட்டு வகுப்புகளுக்கு என பிரத்யேக பாடப் புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் காலாண்டு, அரையாண்டு, இறுதித்தேர்வுகளின்போது விளையாட்டுப் பாடத்துக்கான தேர்வு நடத்தப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 1975-76-ஆம் கல்வியாண்டில் உடற்கல்வி கட்டாயப் பாடமாக்க ஆணையிடப்பட்டு, அதில் பெறும் மதிப்பெண்கள் மாணவர்களின் தேர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இது தொடர்பான பாடங்கள் அடங்கிய உடற்கல்வி புத்தகமும் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1995-ஆம் ஆண்டுக்குப் பிறகு, உடற்கல்வி வகுப்புக்கு பாடத்திட்டங்களோ, புத்தகமோ வழங்கப்படவில்லை.
பள்ளிகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டபோது 9-ஆம் வகுப்புக்கு மட்டும் உடற்கல்வி பாடத்துக்கு கையேடு வழங்கப்பட்டு, அதுவும் அந்த ஆண்டோடு நிறுத்தப்பட்டு விட்டது.
அதே வேளையில், வாரந்தோறும் உடற்கல்விக்கான இரு வகுப்புகளும் பிற பாடங்கள் நடத்தவே ஒதுக்கப்படுவதாகவும், பள்ளிகளில் பல ஆண்டுகளாக தாங்கள் விளிம்புநிலை மனிதர்களாகவே நடத்தப்படுவதாகவும், உடற்கல்வி ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பிற பணிகளில் ஈடுபடுத்தப்படும் அவலம்: இது தொடர்பாக தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்- உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநில தலைமை நிலையச் செயலர் ஆர்.சீனிவாசன் கூறியது: மற்ற பாடங்களின் ஆசிரியர்களைப் போன்றே உடற்கல்வி ஆசிரியர்களும் முறையாக பாடத்திட்டங்களைப் படித்து, பயிற்சி எடுத்த பிறகு ஆசிரியர்களாக வருகிறோம். ஆனால் பள்ளிகளில் காப்பாளர், துப்புரவாளர் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்கே பெரிதும் பயன்படுத்தப்படுகிறோம். இந்த நிலை, நிகழ் கல்வியாண்டில் இருந்து மாற வேண்டும். எங்கள் கோரிக்கையின்படி ஒன்றாம் வகுப்பிலிருந்து மாணவர்களுக்கு உடற்கல்வி பாடநூல்கள் வழங்க வேண்டும். அப்போதுதான் என்னென்ன விளையாட்டுகள் உள்ளன, விதிமுறைகள், விளையாட்டு மைதானங்களின் அளவு விவரம் போன்ற தகவல்களை மாணவர்களுக்கு கற்பித்து அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி வழங்க முடியும். இதுகுறித்து அரசிடம் பலமுறை முறையிட்டுள்ளோம்.
அப்படி முறையிடும் போதெல்லாம் உடற்கல்விக்கு பாடத்திட்டம் தயாராகி விட்டதாகவும், விரைவில் உடற்கல்விக்கு புத்தகம் வழங்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அதற்குப் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து உடற்கல்விக்கான பாடநூலை விரைவில் வழங்குவதுடன், அதற்கான வகுப்புகளை வேறு எந்தப் பாடத்துக்கும் ஒதுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட வேண்டும் என்றார்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "புதிய பாடத்திட்டத்தில் விளையாட்டுப் பிரிவுக்கான பாட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் கொடுத்தவுடன் பள்ளிக் கல்வித் துறை மூலமாக மாணவர்களுக்கு உடற்கல்வி புத்தகம் வழங்கப்படும்' என்றனர்.
உலக வரலாற்றில் ஒரு நாடு அதன் விளையாட்டுத் திறனைப் பொருத்தும் மதிப்பிடப்படுகிறது. சிறிய நாடுகள் கூட விளையாட்டில் பெறும் வெற்றியின் மூலம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. அந்தளவுக்கு முக்கியத்துவம் கொண்ட விளையாட்டுப் பயிற்சியை தமிழக மாணவர்களுக்கு இளம் வயதிலேயே வழங்க பள்ளிகளில் விளையாட்டு வகுப்புகள் முறையாக நடைபெறுவது அவசியம் என விளையாட்டு வீரர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment