எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நீட் தேர்வு விடைத்தாள் குளறுபடியில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம்

Saturday, June 15, 2019




நீட் தேர்வு விடைத்தாள் குளறுபடியில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது.
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கடந்த மாதம் 5ம் தேதி நடத்தப்பட்டது. இதற்கான விடைத்தாள் கடந்த மாதம் 29ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், சில கேள்விகளுக்கான பதில்கள் தவறாக கொடுக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் கடந்த மாதம் 30ம் தேதி சுட்டிக் காட்டினர். இதையடுத்து, மாற்றி அமைக்கப்பட்ட விடைத்தாள் கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில் அவர்கள், ‘நீட் தேர்வு நடத்திய ‘நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சி (என்டிஏ), தவறான விடைத்தாள் புத்தகத்தை வெளியிட்டது. இது குறித்து நாங்கள் தெரிவித்ததும், மாற்று விடைத்தாள் கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது. அதிலும், தொடர்ச்சியான தவறுகள் உள்ளன. முதலில் சரியான பதில்களாக தெரிவிக்கப்பட்டவை, தவறான விடைகளாக மாறின. இதனால், என்டிஏ நடத்திய தேர்வு சட்ட விரோதமானது, விதிமுறைகளுக்கு உட்படாதது. இதனால், எங்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு வாய்ப்பு பாதித்துள்ளது. இதனால், இந்த தேர்வுமுறையை ரத்து செய்ய வேண்டும்’ என கூறியிருந்தனர். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி, சூர்யா காந்த் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மாணவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மானு சிங்வி வாதிடுகையில், ‘‘நீட் தேர்வு நடத்திய என்டிஏ தவறான விடைத்தாள் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. நான்கு மதிப்பெண் உடைய 5 கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான விடைகள் இருந்தன,’’ என குறிப்பிட்டார். இதேபோல், கொல்கத்தா மாணவர்கள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது வரும் 17ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அவர்களின் வக்கீல் உச்ச நீதிமன்றத்தில் நேற்று கூறுகையில், ‘‘நீட் தேர்வில் அனைத்து கேள்விகளுக்கும் ஒரே ஒரு விடைதான் சரியாக இருக்கும் என தகவல் புத்தகத்தில் என்டிஏ குறிப்பிட்டிருந்தது. ஆனால், நீட்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியாக இருப்பது பின்னர் கண்டறியப்பட்டது,’’ என்றார்.

அதன்பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘விடைகளை எல்லாம் இந்த நீதிமன்றத்தால் சரிபார்க்க முடியாது. அனைத்து பாடப் பிரிவுகளிலும் நாங்கள் நிபுணர்கள் அல்ல. விடைத்தாளில் தலையிடுவது, தேர்வு நடத்திய என்டிஏ அமைப்பை விட உச்ச நீதிமன்றம் உயர்ந்த அமைப்பு என்பதுபோல் அர்த்தமாகிவிடும். தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டதும், நிபுணர் குழு தலையிட்டு மாற்று விடைத்தாள் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. பதில்களும் சரி செய்யப்பட்டுள்ளன. இதில், தீய நோக்கம் எதுவும் இருப்பது போல் தெரியவில்லை. இப்போது எல்லாம் இதுபோன்ற விஷயங்களில் அதிக தலையீடுகள் உருவாகி அதிக பிரச்னைகள் எழுகின்றன.

மனுதாரர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்று, தங்கள் புகார்களை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம்,’’ என்றனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One