அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தால் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் 2,006 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா கோபியில் உள்ள பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. அடுத்த மாதம் பிளஸ் 1 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்து முடித்து மடிக்கணினி பெறாமல் உள்ள மாணவர்களுக்கு இன்னும் 2 மாதங்களில் மடிக்கணினி வழங்கப்படும்.
2013 முதல் 2017-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உள்ளனர். அவர்களுக்கு பணிவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தோம். தற்போது ஆறு ஆண்டுகள் ஆனதால் அவர்களுக்கு தகுதித் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தால் ஆசிரியர்களும் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை என்பதில் மாற்றமில்லை. தமிழுக்கு மாநில அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது. தனியார் பள்ளிகளில் பயிலும் 7 லட்சம் மாணவர்களுக்கும் தமிழ் வழி புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த கல்வி ஆண்டு முதல் "ஸ்மார்ட் அட்டை'யை பள்ளி மாணவர்கள் இலவசப் பேருந்துப் பயணத்துக்கு பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
அரசுப் பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கும் தனி நபர்களுக்கு வருமான வரி விலக்கு அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை நடைமுறைப்படுத்தப்படும். பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடிகள் செய்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றார்
No comments:
Post a Comment