எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர்களை கொண்டாடும் அதிசய மாணவர்...

Sunday, September 1, 2019
ஆசிரியர்களை கொண்டாடும் அதிசய மாணவர்... வழிகாட்டிகளின் பெயரில் அறக்கட்டளைகள் அமைத்த கவிதாசன்!

ஏறத்தாழ 30 லட்சம் மாணவர்களிடம் நன்னெறிகளையும், தன்னம்பிக்கை கருத்துகளையும் விதைத்து, இளைய தலைமுறைக்கு வழிகாட்டி வரும் கவிஞர் கவிதாசன், தனது வழிகாட்டிகளான ஆசிரியர்களின் பெயரில் கல்வி நிறுவனங்களில் அறக்கட்டளைகள் அமைத்து, பல்வேறு செயல்பாடுகளை ஆர்ப்பாட்டமின்றி முன்னெடுத்து வருகிறார். ஆசிரியர்களைக் கொண்டாடும் இந்த அதிசய மாணவரை (!) சந்தித்தோம்.

'எல்லா உயிரினங்களுமே பிறக்கும்போதே வாழக் கற்றுக்கொண்டு பிறக்கின்றன. தனியாக எந்தப் பயிற்சி தருவதில்லை. ஆனால், பகுத்தறிவு மிகுந்த மனிதருக்கு கல்வியும், வாழ்வியல் நெறிகளும் கற்றுத்தர ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.

சாதாரண மனிதர்களை சாதனையாளராக்கும் வேலையைச் செய்வது ஆசிரியர்கள்தான். மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்வது மட்டுமின்றி, ஒழுக்கத்தையும் கற்றுத் தருவது ஆசிரியர்களே.

அலெக்ஸாண்டரை உருவாக்கிய அரிஸ்டாட்டில், விவேகானந்தரை உருவாக்கிய ராமகிருஷ்ண பரமஹம்சர் என ஒவ்வொரு
தலைவரையும் உருவாக்கியது ஆசிரியர்கள் தான். எனவேதான், ஆசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அதனால்தான், குடியரசுத் தலைவர் நிலைக்கு உயர்ந்தபோதும், தனது ஆசிரியரை தேடிச் சென்று வாழ்த்து பெற்றார் அப்துல் கலாம்.எனது ஆரம்பக் கல்வி முதலே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆசிரியர்கள்தான் அறிவை, முயற்சியை, தன்னம்பிக்கையைக் கொடுத்து, என்னை வளர்த்தார்கள்.

நான் பிறந்தது மிகச் சிறிய கிராமமான கந்தேகவுண்டன் சாவடி. ஏழை விவசாயக் குடும்பம். பிழைப்புக்காக ஆனைகட்டி அருகேயுள்ள அட்டப்பாடிக்கு குடிபெயர்ந்தோம். அங்கு திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்திய ஆசிரியர் சுப்பிரமணியம், எனக்கு அடிப்படைக் கல்வி போதித்தார். ஐந்தாம் வகுப்பு வரை அவரிடம் பாடம் கற்றேன்.

பின்னர், சின்னதடாகம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தேன். அங்கு பணியாற்றிய ஆசிரியர் அப்பாவுதான், என்னை பேச்சாளராக உருவாக்கினார். பின்னர், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 பயின்றேன். அங்கு எனக்கு ஆசிரியராக வாய்த்தவர் புலவர் பெரியசாமி. அவர் கொடுத்த ஒரு வீட்டுப் பாடத்தை செய்யாததால், 50 திருக்குறள்களை மனப்பாடம் செய்யுமாறு உத்தரவிட்டார். நானும் மனப்பாடம் செய்தேன். அப்போது நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று, 50 திருக்குறள்களையும் ஒப்புவித்து பரிசு பெற்றேன். இப்படி என்னை அவர் தொடர்ந்து ஊக்குவித்தார்.

பள்ளிக் கல்விக்குப் பிறகு, கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதார அறிவியல் சேர்ந்தேன். அங்கிருந்த பேராசிரியர் ஏ.ராஜு, நான் ஐஏஎஸ்-ஆக வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்துவார். பொது அறிவு உள்பட ஏராளமான விஷயங்களையும் கற்றுக்கொடுத்தார். நான் பி.ஏ. படிக்கும்போது `நனவுகளும் கனவுகளும்` என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டதுடன், `அறிமுகம்` என்ற கையெழுத்துப் பிரதியையும் நடத்தினேன்.

பின்னர், பிஎஸ்ஜி கலைக் கல்லூரியில் எம்.ஏ. (சமூகப் பணி) சேர்ந்தபோது, என்னைப் பற்றி அறிந்திருந்த பேராசிரியர் பா.சம்பத்குமார், என்னை அழைத்துப் பேசினார். `எம்.ஏ. தமிழ் பயிலும் பார்வையற்ற மாணவர் அரங்கநாதனுக்கு, ஓய்வு நேரத்தில் தமிழ் கற்றுத் தர முடியுமா?' என்று அவர் கேட்டார். இதற்கு ஒப்புக்கொண்டு, மாலை நேரங்களில் அரங்கநாதனுக்கு தமிழ் பயில உதவினேன். இதன் மூலம் எனது மேடைப்பேச்சில் தமிழின் வலிமை அதிகரித்தது. தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்காத எனக்கு, தமிழ் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாக இது அமைந்தது. இந்த வகையில் என்னால் மறக்க முடியாத ஆசிரியர் சம்பத்குமார்.இதேபோல, முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்தபோது, ஜி.ஆர்.டி. கல்லூரி பேராசிரியர் பொன்னுசாமி, இரவு-பகல் பாராது எனக்கு வழிகாட்டியாக இருந்தார். இப்படி நிறைய ஆசிரியர்கள் என் வாழ்வை செம்மைப்படுத்தினர்.

இவர்கள் மட்டுமல்ல, மகாகவி பாரதியும், அப்துல்கலாமும்கூட எனக்கு மிகப் பெரிய வழிகாட்டிகளாக இருந்தனர். ஏகலைவன்போல அவர்களிடம் பலவும் கற்றுக்கொண்டேன். ரூட்ஸ் நிறுவன இயக்குநர், பேச்சாளர், எழுத்தாளர், தன்னம்பிக்கைப் பயிற்சியாளர் என நான் அடைந்த உயரங்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களே அடிப்படை. இப்படி எனது வாழ்க்கையில் ஒளியேற்றிய ஆசிரியர்களின் நினைவாக, ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்துகொண்டே இருந்தது.

அடிப்படைக் கல்வியைக் கற்றுத் தந்த திண்ணைப்பள்ளிக்கூட ஆசிரியரை 2000-ம் ஆண்டில் தேடிக் கண்டுபிடித்தேன். தற்போதுவரை அவருக்கு மாதம் ரூ.2,000 ஓய்வூதியம் அனுப்பி வருகிறேன்.

2002-ல் எனது `எண்ணங்களே ஏணிப்படிகள்' என்ற புத்தகத்துக்கு ரூ.50 ஆயிரம் பரிசு கிடைத்தது. அதைக் கொண்டு, கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையில், அப்துல் கலாம் பெயரில் ஓர் அறக்கட்டளையைத் தொடங்கினேன். ஒவ்வோர் ஆண்டும் இந்த அறக்கட்டளை சார்பில் அக்டோபர் 15-ம் தேதி கலாம் பிறந்த நாளை, மாணவர் தினமாகக் கொண்டாடுகிறோம்.
இதேபோல, 2008-ல் பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் முனைவர் ஏ.பொன்னுசாமி பெயரிலும், 2012-ல் பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பா.சம்பத்குமார் பெயரிலும், 2016-ல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் பெயரிலும், கோவை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியர் ஏ.ராஜு பெயரிலும் அறக்கட்டளை தொடங்கினேன்.

வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து, இயக்குநர் பதவி வரை உயர்ந்தவர் ஜெ.கமலநாதன். அரசுக் கலைக் கல்லூரியில் நான் படித்தபோது, வானொலியில் நிகழ்ச்சி களை தொகுத்து வழங்கவும், கவியரங்குகளை ஒருங்கிணைக்கவும் எனக்கு வாய்ப்புக் கொடுத்தார். வானொலியின் தத்துப் பிள்ளையாகவே என்னை மாற்றினார். எனவே, அவரது பெயரில் நிர்மலா மகளிர் கல்லூரியில் ஓர் அறக்கட்டளையைத் தொடங்கினேன். இப்படி 6 அறக்கட்டளைகள் தொடங்கி, பல்கலைக்கழகம், கல்லூரிகளில் சுமார் ரூ.20லட்சம் வைப்புத்தொகை செலுத்தியுள்ளேன். இந்த அறக்கட்டளைகள் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுக்கின்றன. மேலும், அறக்கட்டளைகள் மூலம் ஆண்டுதோறும் புத்தகங்களையும் வெளியிட்டு வருகிறேன். நான் இதுவரை 67 புத்தகங்களை வெளியிட்டுள்ளேன்.

ஆசிரியர்கள் என்பவர்கள் தெய்வத்தைக் காட்டிலும் உயர்ந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும், எவ்வளவு பெரிய நிலைக்குச் சென்றாலும் ஆசிரியர்களை மறந்துவிடக்கூடாது. இதுவே இளைய தலைமுறைக்கு எனது வேண்டுகோள்' என்றார் நெகிழ்ச்சியுடன் கவிதாசன்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One