எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

"பிறந்த நாளுக்கு சாக்லெட்டுக்குப் பதில் மரக்கன்று!" அசத்தும் விழுப்புரம் கல்வி அதிகாரி

Monday, September 16, 2019


பசுமைப் பள்ளிகள் எனும் பெயரில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கி, இயற்கையை வளர்த்தெடுக்கும் கல்வி அதிகாரி.

"என் சின்ன வயதில் நிறைய மரங்கள் இருந்த இடங்களில் எல்லாம், இப்போது ஒரு மரத்தையும் பார்க்க முடியவில்லை" என்று ஆதங்கத்தோடு பேசத்தொடங்கினார் விழுப்புரம் மாவட்டக் கல்வி அதிகாரி முனுசாமி. பள்ளிகளில் மரக்கன்றுகள் நடுவதற்கு ஆசிரியர்கள் ஆர்வம் காட்டும் செய்திகளைப் படித்திருப்போம். ஆனால், மாவட்டக் கல்வி அதிகாரியே முழு வீச்சோடு இந்தப் பணியை மேற்கொள்கிறார் என்பது ஆச்சர்யமானதுதானே!

"எனக்கு சொந்த ஊர் சிதம்பரம் பக்கத்தில் உள்ள பூலாமேடு கிராமம். எங்க ஊரில் நிறைய மரங்கள் இருக்கும். அதோட வளர்ந்தவன் நான். இப்போ ஊருக்குப் போனால், மரங்களே ரொம்ப ரொம்பக் குறைஞ்சிபோயிருந்துச்சு. சின்ன வயசிலிருந்தே மரங்கள் வளர்க்கிறதுல ஆர்வம் இருந்துச்சு. சி.இ.ஓ ஆனதும் நிறைய பள்ளிகளுக்குப் போறதுக்கான வாய்ப்பு கிடைச்சுது. சரி, நம்ம எல்லைக்குட்பட்ட பள்ளிகள்ல மரக்கன்றுகளைக் கொடுத்து வளர்க்கச் சொல்லலாமேனு ஒரு யோசனை வந்ததுச்சு. கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளா பள்ளிகள்ல கொண்டாடிட்டு வர்றோம். இந்த வருஷத்துல அந்த நல்ல நாள்லேருந்தே மரக்கன்று வளர்க்கிறதைத் தொடங்க நினைச்சேன். ஏன்னா, இயற்கையைக் காப்பாற்ற அடுத்த தலைமுறையைத் தயார் படுத்துறதுதானே சரியா இருக்கும்.

செஞ்சி அரசு ஆண்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்லதான் இந்தத் திட்டத்தைத் தொடங்கினேன். இரண்டு பள்ளிகளுக்கும் சேர்ந்து 4,500 மரக்கன்றுகளைக் கொடுத்தேன். தியாகதுருகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில 2,800 மரக்கன்றுகள் கொடுத்தேன். ஒரு சில பள்ளிகள்ல மரக்கன்றுகளைக் கொடுத்திட்டு நின்னுட கூடாதுன்னு 'பசுமைப் பள்ளிகள்'னு இதற்குப் பெயர் வைத்து பல பள்ளிகளுக்குப் பரவலாகக் கொண்டுபோகிறேன். நான் நேரடியாகப் போனது 28 பள்ளிகள்தான் என்றாலும், ஆசிரியர்கள் மூலமா வழங்கியதுன்னு கணக்குப் பார்த்தா இன்னிக்கு வரை 37,000 மரக்கன்றுகளைக் கொடுத்திருக்கிறேன். இந்த வருஷ டிசம்பருக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடணும்னு எண்ணம்.


மரக்கன்றுகள் நடுவது பல இடங்கள்ல சம்பிரதாயமாத்தான் நடக்கும். அதை மாத்தணும்னுதான் ஒரு பள்ளியில் 100 மரக்கன்றுகள் கொடுக்கிறேன்னா, 100 மாணவர்கள்கிட்ட கொடுப்போம். அந்தக் கன்றுகளுக்கு அந்தந்த மாணவர்கள்தான் பொறுப்பு. அப்பப்ப போய்ச் செக் பண்ணுவோம். பிறகு, ஒரு மாணவரின் பிறந்த நாள் வந்தா, சாக்லேட் கொடுப்பதற்குப் பதில் மரகன்றுகளைக் கொடுக்க வெச்சோம். மரக்கன்றுகளைக் கொடுத்தா மட்டுமே போதாது. ஏன் வளர்க்கணும்னு மாணவர்களுக்குத் தெரிஞ்சாதான் பொறுப்போடு வளர்ப்பாங்க. அதனால, நான் என்ன மரக்கன்று கொடுக்கிறனோ அதன் பெயர், பலன்களைச் சொல்லியே கொடுப்பேன். அம்மரம் பத்தின அறிவியல் செய்திகளை ஆசிரியர்களைச் சொல்ல வைப்பேன்.

ஒரு பள்ளிக்குப் போயிருந்தபோது, மரநிழல்ல வகுப்பு நடந்தது. அங்கே பேசினப்ப, 'இப்போ நீங்க ஜாலியா உட்கார்ந்து படிப்பது 20 வருஷத்துக்கு முன் யாரோ நட்ட மரத்தின் நிழல்ல. அடுத்து வர்றவங்களுக்கு இதேபோல நிழல் வேணும்னா நீங்க அவசியம் மரம் நடணும்னு சொன்னேன். பெரியவங்களுக்கு இது சாதாரணமாகச் சொல்ற வார்த்தையா தெரியலாம். ஆனா, மாணவர்களுக்கு ரொம்ப உற்சாகமா இருந்துச்சு. ஆர்வத்தோடு மரக்கன்றுகள் நட முன்வந்தாங்க. நம்ம பாடத்திட்டத்துலேயும் பள்ளிச் செயல்பாடுகளுக்கு மதிப்பெண்கள் கொடுக்கும் முறை இருக்கு. அதை இந்த மரம் வளர்ப்புத் திட்டத்துக்குப் பயன்படுத்திக்கொள்றாங்க. நன்றாக மரக்கன்றுகளை வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் தருகிறார்கள்.

பள்ளிக்கு ஓர் ஆசிரியர் இந்த வேலையைப் பொறுப்பேற்றுக்கொண்டு கவனிச்சிருக்கிறாங்க. அதனால பல பள்ளிகளுக்கு என்னைக் கூப்பிட்டுகிட்டு இருக்காங்க. அதனால நான் நினைச்ச மாதிரி இந்த வருஷத்துக்குள்ள ஒரு லட்சம் மரக்கன்றுகளைக் கொடுத்திட முடியும்னு நிச்சயமா நம்பறேன்" என்கிறார் நம்பிக்கையுடன்.

பசுமைப் பள்ளிகள் எண்ணிக்கை அதிகரிக்கட்டும்.

2 comments

  1. வாழ்த்துகள் ஐயா தாங்கள் சேவை தொடரட்டும்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ஐயா உங்கள் கல்வி .. இயற்கை வளம் சேவை தொடரட்டும்..உடன் இணைந்து பணியாற்ற வலுசேர்க்கும் விரும்புகிறேன்..

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One