உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் கோவை கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரி இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வானியல் சார் அறிவியல் பயிற்சி பட்டறை கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
பயிற்சிக்கு வருகை தந்தவர்களை கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.எம்.அகிலா அவர்கள் வரவேற்று பேசினார். கே.பி.ஆர்.கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.எஸ்.பாலுசாமி தலைமை வகித்தார். பயிற்சியில் பகல்நேர வானியல் பற்றியும் வானவியலில் தற்போதுள்ள புதிய கண்டுபிடிப்புகள், சூரிய குடும்பம், நட்சத்திர தொகுதிகள், பற்றி ஈரோடு அறிவியல் சங்க தலைவர் வாசுதேவன் மாணக்கர்களுக்கு எடுத்துரைத்தார்.
கிரகணங்கள் எவ்வாறு ஏற்படுகிறது மற்றும் மூன்று வகையான சூரிய கிரகணங்கள் பற்றியும் தற்போது டிசம்பர் 26ல் வரவுள்ள வளைய சூரியகிரகணம் என்றால் என்ன? அது எவ்வாறு நிகழ்கிறது என்பது பற்றி மாணாக்கர்களுக்கு படங்கள் மூலமும், செய்து காட்டல் மூலமும் புனே, IUCAA வில் இருந்து வருகை தந்த கருத்தாளர் சோனால் அவர்கள் எடுத்துக் கூறினார்.மாணாக்கர்களின் பல்வேறு வகையான கிரகணங்கள் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
மதியம் எளிய உபகரணங்களை பயன்படுத்தி சூரிய கிரகணத்தை உற்றுநோக்குவது பற்றியும், சூரியனின் விட்டம், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவை அளத்தல், சூரியனின் கரும்புள்ளிகளை எவ்வாறு உற்றுநோக்குவது ஆகியவற்றை செயல்முறை மூலம் மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்து பார்த்து கற்றுக்கொண்டனர். சூரியனின் பிம்பத்தை தொலைநோக்கி மூலம் எதிரொளிக்கச் செய்து எவ்வாறு சூரிய கிரகணத்தை பார்பது என்பதை அதற்கான கருவி மூலம் உற்றுநோக்கி தெரிந்துக்கொண்டனர். இந்த நிகழ்வை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் விளக்கிக் கூறினார்.
நிகழ்வில் தமிழகம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட மாவட்டத்திலிருந்து சுமார் 400 ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். விடுமுறை நாளிலும் பல்வேறு அரசுப்பள்ளி, தனியார் பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் எளிய உபகரணங்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment