எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

எங்கே அந்த தீபாவளி ?

Friday, October 25, 2019


பத்து நாட்கள் முன்னதாகவே பழைய பட்டாசுகளை காயவைக்கும் சாக்கில் தொட்டுப்பார்த்து சந்தோஷப்பட்டு
விரல்விட்டு நாட்களை எண்ணிப்பார்த்து

நண்பர்கள் யார்யார் வீட்டில் எவ்வளவு ரூபாய்க்கு பட்டாசு வாங்குவார்கள் என ஆராய்ச்சி செய்து

புதுத்துணி தைக்க கொடுத்து,  தையல்காரர் தைத்து கொடுத்து விடுவாரா என நினைத்தபடியே ஏங்கி

நமக்குத்தெரியாமல் அப்பாம்மாக்கள் அதை வாங்கி  surprise என்றபேரில் ஒளித்துவைத்திருக்க

பக்ஷணங்கள் தயாரகும்போதே அவசர அவசரமாக உம்மாச்சிக்கு காட்டிட்டு வாயில் போட்டுக்கொள்ள

தாத்தாபாட்டியோட தான் தீபாவளி என்று ஆசையோடு அப்பாகூட ஜன்னல் வழியாக இடம் போட்டு  பஸ்ஸில் பயணம் செய்து

அங்கே உள்ள பழய,  புதிய friends கூட ஜாலியாகப்பழகி

பந்துக்களுடைய பாச மழையில் நனைந்து

முதல்நாள் மாலையே அப்பா கையைபிடித்து மத்தாப்பு புஸ்வாணங்கள்,  தரைச்சக்கரங்கள் விட்டு,  கிட்டேவரும்போது பயந்து  தாண்டி குதித்து
பிறர் கேலி செய்ய

ம் ம் ஆச்சு போறும் சீக்கிரம் படு, விடிஞ்சா தீபாவளி,  சீக்ரம் எழுந்துக்கணும் என விரட்டும் தாத்தாவுக்கு பயந்து கள்ளத்தூக்கம் தூங்க ஆரம்பித்து உண்மையாகவே தூங்கி வழிந்த

காலையில் 3 மணிக்கெல்லாம் பலவந்தமாக எழுப்பி பாதி தூக்கத்திலேயே தன் பழுத்த கைகளால் இளஞ்சூடோடு கூடிய பாசத்தில் பாட்டி எண்ணை தேய்த்த

அந்த இருட்டிலே விறகடுப்பில்  நம் பாட்டி, அம்மா ஊதிக்கொண்டிருந்த...

நாம் முரண்டுபிடிக்க எண்ணைபோக சீயக்காய் பொடியை அம்மா தேய்க்க நம் கண் எரிந்த அந்த...

ஸ்வாமி முன்னாடி மஞ்சள் தடவிய புத்தாடையை பெரியவர்கள் எடுத்து தர அதை மாட்டிக்கொண்டு பட்டாசை தூக்கிக்கொண்டு தெருவில் ஓடிய.....

கூப்பிட்டு நமஸ்காரம் பண்ணச்சொல்லி, இந்தா தீபாவளி இனாம் என்று 1 ரூ. நோட்டை அப்பா தர, வாயில் சுழிக்க சுழிக்க தீபாவளி மருந்தை அம்மா ஊட்டிய....

கங்காஸ்நானம் ஆச்சா என்று கையயில் இனிப்பு, மிக்சருடன் பக்கத்தில் உள்ள பெரியவர்களிடம் நம்மையும்  கையில் இழுத்துக்கொண்டோடிய....

அவர்கள் தீபாவளி துட்டு என்று ஆசையாக நாலணா தந்த...

காலை  6 மணிக்கெல்லாம் தீபாவளிக் இட்லியும் சட்னியுடன் சாப்பிட்ட..

சட சட என சரம் வெடிப்பதை பார்த்து துள்ளும்போது,   காசைக்கரியாக்காம ஒண்ணொண்ணா பிரித்து வெடிடா என்று தாத்தா திட்டிய...

ரெண்டு சீனி வெடியை சேர்த்து,  கொட்டாங்குச்சி ஓட்டைக்குள், மண்ணைக்கவித்து அதில் சொருகி என வித விதமாக ரசித்துக்கொண்டாடிய...

நம் சரக்கு காலியானபின் அக்கம்பக்கத்தில் ஏதாவது தலைதீபாவளிக்கு அதிகமாக பட்டாசு வெடிப்பதை அப்பாம்மாவுக்கு தெரியாமல் நம் கௌரவம் குறையாமல் தள்ளி நின்னு வேடிக்கை பார்த்த...

ராத்திரியில் சீக்கிரமே ஊர்   ஓய்ந்திட. நம்மை ஏக்கத்திலும் தூக்கத்திலும் ஆழ்த்தி  நாம் அறியாமல் விடைபெற்ற அந்த தீபாவளியை எங்கேயாவது பார்த்தால் அனுப்பிவைங்கோளேன்....!!!

     சு . பாஸ்கர் அன்பரசி  வித்தேஷ்வரமூர்த்தி  லோகநாயகி

1 comment

  1. Mm super 👌.really made us to remember the golden , olden days.but present generation missing a lot of such things.🤔.kalathin kolam.😐.

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One