எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி தொடங்கி 17 ஆண்டுகளுக்கு பின்பு முதல் ஆண்டு விழா கண்ட அரசுப்பள்ளி

Tuesday, February 25, 2020












பள்ளி தொடங்கி 17 ஆண்டுகளுக்கு பின்பு முதல் ஆண்டு விழா கண்ட உருவம்பட்டி அரசுப்பள்ளி :ஊர்ப் பொதுமக்கள் உற்சாகம்

அன்னவாசல்,பிப்.24:பள்ளி தொடங்கி 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல்  ஆண்டு விழா நடைபெற்றதால் ஊர் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது.இப்பள்ளி 3.10.2003 அன்று தொடங்கப்பட்டுள்ளது.இப்பள்ளி தொடங்கி 17 ஆண்டுகள் ஆண்டு விழா காணாமல் இருந்துள்ளது.எனவே இந்தாண்டு ஆண்டு விழாவை பிப்ரவரி 24 திங்கட்கிழமை இரவு  வெகு சிறப்பாக கொண்டாடினர்.இதனால் பள்ளி வளாகமே விழாக்கோலமாக காட்சியளித்தது.பள்ளி அமைந்திருந்த தெருவெங்கும் தோரணங்கள்,ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டிருந்தன. ஆண்டு விழாவில் அத்தனைக் குழந்தைகளும் மேடையேறி நடனம் ஆடினார்கள்.குறிப்பாக இப்பள்ளியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பயின்ற மாணவ,மாணவிகளின் கனவை நிறைவேற்றும் வகையில் அவர்களும் கலைநிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.அதில்  மாணவிகள் அம்மன் பாடலுக்கு நடனமாடினார்கள்.அப்பொழுது பார்வையாளர்களாக வந்திருந்த பெண்கள் அனைவரும் சாமி ஆடினார்கள்.அதே போல் முன்னாள் மாணவர்கள் கருப்பசாமி பாடலுக்கு நடனமாடினார்கள். அப்பொழுது பார்வையாளர்களாக வந்திருந்த ஆண்கள் அனைவரும் சாமியாடினார்கள்.இந்நிகழ்வு குறித்து  அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் குழந்தைகள் கலைநிகழ்ச்சிகள் நடந்ததாக பேசி வருகின்றனர்.

முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளித்தலைமையாசிரியர் ஜெ.சாந்தி வரவேற்றுப் பேசினார்.அன்னவாசல் வட்டாரக்கல்வி அலுவலர்கள் பெ.துரையரசன்,எஸ்.செங்குட்டுவன்,கே.பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலந்து கொண்டு  விளையாட்டுப் போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, இலுப்பூர் மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கி இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.ராஜேந்திரன் பேசியதாவது:பள்ளி என்பது குழந்தைகளுக்குப் பாடம் மட்டும் போதிப்பதாக இருக்கக்கூடாது. குழந்தைகளின் தனிப்பட்ட திறன்களை வெளிக்கொணர்வதே பள்ளிக் கூடத்தின் செயல்பாடாக இருக்க வேண்டும். குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டி அவர்கள் முன்னேற தன்னை உலகிற்கு வெளிப்படுத்த அத்துனை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவதாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் பள்ளிகளில் பல விழாக்ககள் கொண்டாடப்படுகிறது. அவற்றுள் முக்கியமானது பள்ளி ஆண்டு விழாவாகும்.
இந்த ஆண்டு விழாவின்  போது
கல்வியாண்டில் தாங்கள் செய்த அத்தனை செயல்பாடுகள், முயற்சிகள், சாதனைகள், அனைத்தையும் வெளியுலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும்.குழந்தைகளின் உள்ளே உள்ள பிற கலைகள், உதாரணமாக ஆடல், பாடல், பேசுதல், நடித்தல் போன்ற தனித்திறமைகளை வெளிப்படுத்த  மேடை  அமைத்து தந்து உதவ வேண்டும்.இவ்வாறு நாம் செய்வதால் மாணவர்களின்  தன்னம்பிக்கை வளர்கிறது  என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஆகவே இத்தகைய சிறப்பான ஆண்டு விழாவை உருவம்பட்டி அரசுப்  பள்ளியில் கொண்டாடிய ஊர்ப்பொதுமக்கள்,ஆசிரியர்களை மனதார பாராட்டுகிறேன் என்றார்.

பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி,அரசினர் மேல் நிலை,உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவரப்பட்டி  இரா.சிவக்குமார்,வயலோகம் ஜெயராஜ்,பெருமாநாடு மு.மாரிமுத்து,மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் எம்.ரெகுநாததுரை,வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராஜ்,ஆசிரியர் பயிற்றுநர்கள் பழனியப்பன், கண்ணன்,முக்காணமலைப்பட்டி கணித ஆசிரியர் சின்னக்கருப்பையா  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர் கருப்பையா,ஒன்றியக் கவுன்சிலர் ஜெயம் தங்கவேல்,குடுமியான்மலை ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்கருப்பையா,துணைத் தலைவர் மனோஜ்குமார்,சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை தலைவர் டாக்டர் அ.ரவிச்சந்திரன்,கூட்டுறவு சங்கத்தலைவர் எம்.முருகேசன்,வார்டு உறுப்பினர்கள் சிவத்தாயி கருப்பையா,மகேஸ்வரி முத்தன்,ஊர் அம்பலம் சிங்கமுத்து ,பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் இராஜேந்திரன் மற்றும் அன்னவாசல் ஒன்றிய தலைமை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்,இடைநிலை ஆசிரியர்கள்,ஊர்ப்பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் பொறியாளர் மூர்த்தி - மாரீஸ்வரி தம்பதியினர் புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள்.அதே போல் சுற்றுச் சூழல் மாசுபடுதலைத் தவிர்க்கவும் உருவம்பட்டி கிராமத்தை பசுமைக் கிராமமாக மாற்றவும் பள்ளியில் படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

 முடிவில் ஆசிரியர் கு.முனியசாமி நன்றி கூறினார்.

ஆண்டு விழா குறித்து பள்ளியின் ஆசிரியர் கு.முனியசாமி கூறியதாவது: ஆண்டு விழா என்று சொன்னவுடன் உருவம்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பையா,இராஜேந்திரன் ,ஊர்ப்பொதுமக்கள் ஆகியோர் என்னிடம் வந்து இதுநாள் வரை இப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெறவில்லை.நீங்கள் நடத்துங்கள் நாங்கள்  அனைத்து உதவிகளையும்  செய்கிறோம் என்றனர்.அவர்களின் ஒத்துழைப்பால் தான் இந்த விழா இன்று இவ்வளவு சிறப்பாக நடைபெற்றது என்றார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One