எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தினம் ஒரு புத்தகம் -தமிழுக்கு நிறமுண்டு

Tuesday, March 31, 2020




 வைரமுத்து
 2006 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட புத்தகம். என் புத்தக அலமாரியில் இருந்து வாசிப்பிற்கு.

 நூலிலிருந்து
 நாகரீகத்தின் படிநிலைகள் ஐந்து என்பர் அறிஞர் வேட்டையாடுதல்,  நாடோடியாய் திரிதல்,  கால்நடை மேய்த்தல்,  கடல் மேல் சேரல்,  உழவு செய்தல்.
 இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எட்டிவிட்ட இனம் தமிழர் இனம்.

 நாகரிகத்தின் இந்த ஐந்து படிநிலைகளுக்கு தமிழர் இட்டபெயர் குறிஞ்சி,  பாலை,  முல்லை,  நெய்தல்,  மருதம் என்பன.
 மாசுபடாத காற்று,  மாசுபடாத தண்ணீர்,  மாசுபடாத காடு,  மாசுபடாத பண்பாடு,  இவற்றோடு தமிழினம் செழித்திருந்த சங்ககாலத்திலேயே தமிழ் உள்ளூர் மனிதர் குறித்தும் சிந்தித்தது.
உலக மானுடம் குறித்தும் உரக்க சிந்தித்தது .
புகழெனின் உயிரும் கொடுக்குவர்
பழி எனில் உலகோடு வரினும் கொள்ளலர்
 என்றும்
 யாதும் ஊரே யாவரும் கேளிர்
 என்றும்
உலக கவிதை எழுதியது தமிழ்.

 உலக வரலாற்றில் மிக நீளமான இரவை சந்தித்த இனம் தமிழினம். களப்பிரர் காலத்தில் இரண்டரை நூற்றாண்டு.
 அந்த இரண்டரை நூற்றாண்டு இருட்டிலும் தமிழ் தன் நிறமிழந்து போகவில்லை.

 அகம்,  புறம் என்ற வாழ்வியல் நெறிகள் சிதைந்து போய் இகம்,  பரம் என்ற வர்ணாசிரமம் வாழ்க்கைமுறை ஆனபோதும்,  மனித உரிமை காப்பது அல்லது மீட்பது என்ற தன் குரலை தமிழ் நிறுத்திக் கொள்ளவே இல்லை.

 ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவரன்றே யாம் வணங்கும் கடவுளாரே
என்று மனிதநேயத்தின் தொடர்ச்சி பேசுகிறது.

 கவிஞர்களும் காலங்களும் மாறி மாறி வந்தாலும் தமிழ் மட்டும் தன் நிறம் மாறாதிருக்கிறது என்ற தமிழ் வரலாற்று  முன்னுரையுடன் தொடங்குகிறது இந்நூல்.

 கேள் மனமே கேள்
 தப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்
 தமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்
 வானளந்த தமிழ் தாயின் பாலை கேட்பேன்
 வைகைநதி புலவர்களின் மூளைக் கேட்பேன்

 20 கட்டளைகள்

எங்கே ஊர்களில்
ஜாதி இல்லையோ
அங்கே கூவுக சேவல்களே
 என தொடங்கி
எங்கே உழைப்பவர்
உயரம் உயருமோ
அங்கே சுழலுக ஆலைகளே
 எங்கே விதைத்தவர்
வயிறு குளிருமோ
 அங்கே விளைந்திடு நெல் மணியே
எனக் கட்டளைகள் இடுகிறார்

 அழைப்பு
பத்து மாதம் என் வயிறு சுமந்த
 பிஞ்சு பிரபஞ்சமே
 நீ தந்த சுகமெல்லாம்
 நெற்றியில் தீயெரியும் தியானத்தில் வந்ததில்லை

ஞானத்தீ

 உள்ளே நெருப்பு
 இல்லாதவர்க்கு
சூரியனும் ஒரு கரித்துண்டு

உள்ளே நெருப்பு
உள்ளவருக்கு
 கரித்துண்டும் ஒரு சூரியன் .

அயோத்தி ராமன் அழுகிறான்

கங்கை காவிரி
இணைக்க வேண்டும்
 கர சேவகரே வருவீரா

காடுகள் மலைகள்
திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
 வறுமைக் கோட்டை
அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா

மாட்டீர்கள் சேவகரே
மாட்டீர்கள்
நாம்
உடைக்கவே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துண்ணும் பறவைகள்
விதைப்பதில்லை

சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

 பிடிமானம்

நண்பர்கள் என்னை சுற்றியிருந்தால்
நரகம் கூட எனக்கு பிடிக்கும்
நாளை என்பது வந்தால் வரட்டும்
 இந்த நிமிஷம் எனக்கு பிடிக்கும்

 தனியாய் இருந்தால் பேச பிடிக்கும்
சபையில் இருந்தால் மௌனம் பிடிக்கும்
எனக்குப் பிடித்தது பிடிக்கும் என்ற
இதயங்கள் எல்லாம் எனக்கு பிடிக்கும்

பிற்சேர்க்கை
முத்துக்கள் பிறக்கும் இடம்
உழைப்பவன் நெற்றி

மூடநம்பிக்கை
மந்திரியிடம் மனு

இருட்டிய பின் செய்யக்கூடாதது
 தொலைக்காட்சி பார்ப்பது

பார்க்க முடியாதவை
ஜனநாயகத்தில் சத்தியம்

என ஒவ்வொன்றுக்கும் ஒரு பிற்சேர்க்கை நகைக்க வைக்கிறது.

 நிபந்தனைகள்
கோயிலுக்கு வருவதற்கு

ஓ விநாயகா
உன்
இன்னொரு தந்ததையும்
இரண்டாய் உடைத்து
இந்தியர் எல்லாருக்கும்
எழுத்தறிவித்தால்

அம்மா ஆண்டாள்!
 முப்பத்தைந்து வயது
 முதிர்கன்னியர்க்கெல்லாம்
நீ மாப்பிள்ளை  அடைந்த
மகத்துவம் சொன்னால்

 தாயே மாகாளி
சூழும் சுயநலமெனும்
வாழும் அரக்கனை உன்
திரிசூலம் கொண்டு
தீர்த்து முடித்தால்
 நான் கூட கோயிலுக்கு போவேன்

 என ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறார்.

 உலகம்
உன்னை பார்த்து உலகம் குரைக்கும்
 தன்னம்பிக்கை தளர விடாதே
 இரட்டை பேச்சு பேசும் உலகம்
 மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே

 ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு
உலகின் வாயில் இரட்டை நாக்கு

 உலகின் வாயைத் தைத்திடு அல்லது
இரண்டு செவிகளை இருக்கி மூடிடு
உலகின் வாயைத் தைப்பது கடினம்
உன் செவிகள் மூடுதல் சுலபம்

மொத்தத்தில் இந்நூல்
எத்தனை வண்ணங்கள் பூசி பார்த்தாலும் தமிழின் மூல வண்ணம் அழிவதே இல்லை.

 காலத்தின் மழையால் வெய்யிலால் தமிழின் நிறம் மங்குவதேயில்லை.

 ஆயுதங்களால் அந்நியக் கலாச்சாரத் திணிப்பால் பிறமொழி உறவுகளின் பிணைப்பால் தமிழ் தந்நிறம் திரிவதில்லை.

 அந்த நிறத்தின் தொடர்ச்சியாய் கவிஞர் இருக்கிறார்.
 இனி வரும் தலைமுறையும் இருக்கும் என்பதை உரக்கச் சொல்கிறது.

 தோழமையுடன்
 சீனி.சந்திரசேகரன்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One