தமிழக அரசின் கல்வி டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்து அமலன் ஜெரோம் விடுவிக்கப்பட்டு மீண்டும் ஆசிரியர் பணிக்குச் செல்ல உத்தரவிடப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு முறைகேடு புகார்கள் காரணமாக தமிழக அரசின் கல்வி டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்து அமலன் ஜெரோம் நீக்கப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை வளர்நகரைச் சேர்ந்த ஆர்.அருண் உயர் நீதிமன்ற கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், "தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் மாநில அரசு சார்பில் 26.8.2019-ல் கல்வி டிவி தொடங்கப்பட்டது. இதன் நிகழ்ச்சி தயாரிப்பாளராக அமலன் ஜெரோம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது தமிழக அரசு சார்பில் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட சிடியை அரசிடம் ஒப்படைக்கும் முன்பு சமூக வலைதளங்களில் வெளியிட்டு பணம் சம்பாதித்தது உட்பட பல்வேறு முறைகேடு புகார்கள் நிலுவையில் உள்ளன.
இந்த முறைகேடு தொடர்பாக அமலன் ஜெரோம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் 29.1.2019-ல் வழக்கு பதிவு செய்தனர். ஊழல் வழக்கை எதிர்கொண்டு வரும் அமலன் ஜேரோமை கல்வி டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளராக நியமித்தது சட்டவிரோதம்.
எனவே அமலன் ஜெரோமை பணி நீக்கம் செய்து, தகுதியான ஆசிரியரை கல்வி டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளராக நியமிக்க உத்தரவிட வேண்டும்.
என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, கிருஷ்வள்ளி அமர்வில் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் கே.நீலமேகம், முகமதுரஸ்வி வாதிட்டனர்.
அரசு வழக்கறிஞர் ஸ்ரீமதி வாதிடுகையில், அமலன் ஜெரோம் மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளன. கல்வி டிவி நிகழ்ச்சிக்கு அவர் குந்தகம் விளைவிப்பதாகவும் புகார்கள் வந்தன. இதனால் அவர் கல்வி டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்து டிச.7-ல் நீக்கப்பட்டார் என்றார். அமலன் ஜெரோம் நீக்கம் தொடர்பாக கடிதத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, அமலன் ஜெரோம் மீதான லஞ்ச ஒழிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி மற்றும் டிஎஸ்பி ஆகியோர் சட்டத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment