சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், வைபை வசதியுடன் 5 இடங்களில் 'தங்கமரம்' வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தில் 3வது பட்டியலில் சேலம் இடம் பிடித்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை செயல்படுத்த மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநகர மக்களின் கருத்து வாக்கெடுப்பின்படி சேலம் மாநகரில் பழைய பஸ் ஸ்டாண்ட், வ.உ.சி., மார்க்கெட் அடங்கிய பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த பகுதிகளில் 1908 கோடி மதிப்பீட்டில் அனைத்து உள் கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு பணிகளை எவ்வகையில் செய்வது?எந்தெந்த பணிகளை முதலில் எடுப்பது? மேம்பாட்டிற்கான வழிமுறைகள் என்னென்ன? அதற்கு தேவைப்படும் நிதி எவ்வளவு? என்பது போன்ற அம்சங்களை ஆராய்ந்து அதற்கான திட்ட அறிக்கைகள் தயாரித்து மதிப்பீடு செய்யும் பணிகள் முடிவடைந்துள்ளன.
முதல் கட்டமாக, திருமணிமுத்தாற்றை அழகுப்படுத்தி பூங்கா அமைக்கும் பணியும், மல்டிலெவல் கார் பார்க்கிங் 2 இடங்களில் அமைக்கவும்,பழைய பஸ் ஸ்டாண்டை இடித்து அகற்றி ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டாக மாற்றவும், ஸ்மார்ட் சாலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை 4 தனியார் நிறுவனங்கள் தயாரித்தன. 207 கோடியில் திட்ட மதிப்பீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கை அரசுக்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 92 கோடியில் பழைய பஸ் ஸ்டாண்டை இடித்து அகற்றி விட்டு ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க டெண்டர் விடப்பட்டது. இதில், 3 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இதனை இறுதி செய்யும் பணியில் மாநகாரட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த மாதம் இறுதியில் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே தன்னார்வலர்கள் பங்களிப்புடன், மாநகரில் 5 இடங்களில் இலவச 'வைபை' தங்கமரம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சதீஷ் கூறுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிக்கை பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும், ஒவ்வொரு திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனிடையே, மாநகரில் தன்னார்வலர்கள் பங்களிப்புடன், 5 இடங்களில் 'வைபை' தங்கமரம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், வைபை வசதி, காற்று மாசு அறிவதை கண்டறியும் கருவி, டிஜிட்டல் போர்டு உள்ளிட்டவை வைக்கப்படும், என்றார்
No comments:
Post a Comment