பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முன் அனுமதி இல்லாமல் அங்கு கூடியதால் நுங்கம்பாக்கம் போலீசார் அவர்களை கலைந்து செல்லும் படி கூறினர். உரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசிய பின்பே போராட்டத்தை கைவிடுவது குறித்து முடிவெடுப்போம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா கூறியதாவது: கடந்த 2012ம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்டையில் 16,500 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார்கள்.
அதன்படி தமிழகம் முழுவதும் நேர்காணல் நடத்தி கிட்டத்தட்ட 14,500 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக மாதம் ஒன்றுக்கு ரூ.5500 சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர். ஊதிய உயர்வு எங்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. 2200 ஊதிய உயர்வு சேர்த்து தற்போது 7,700 நாங்கள் சம்பளம் பெற்று கொண்டிருக்கிறோம். ஆனால் பள்ளியில் கோடைகால விடுமுறையில் பணி இல்லை என்பதால் எங்களுக்கு சம்பளம் கிடையாது. தற்போது விற்கும் விலைவாசி அடிப்படையில் குறைந்த சம்பளத்தை வைத்து கொண்டு சிரமப்பட்டு வருகிறோம். இதனால் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இறந்துவிட்டனர்.
தொடர்ந்து நாங்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டு வருகிறோம். 6, 7 ஆண்டுகளில் 10 கல்வி அமைச்சர்கள் மாறிவிட்டனர். அவர்களை சந்தித்து எங்கள் கோரிக்கையை சொல்லும் போதெல்லாம் செய்கிறோம் செய்கிறோம் என்று சொல்கிறார்களே தவிர யாரும் செய்யவில்லை. பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இதுபோன்ற தொகுப்பூதியத்தில் இருப்பவர்களுக்கு 16,500 சம்பள உயர்வு கொடுத்து பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முன்பு அதிமுக ஆட்சியில் 1996ல் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியனம் செய்யப்பட்ட ஆசிரியர்களாக இருந்து 2006 திமுக ஆட்சியில் 13500 பேரை பணி நிரந்தரம் செய்தனர். அதை முன் உதாரணமாக கொண்டு எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். தற்போதுள்ள கல்வி துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த போது நிதி ஆதாரமில்லை என்று சொன்னார். தற்போது, 12,500 பேர் பணியாற்றி வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனரை சந்தித்து மனு கொடுக்க போகிறோம். உறுதி மொழி அளிக்காவிட்டால் தொடர்ந்து நாங்கள் இந்த வளாகத்தில் இரவு பகலாக போராட்டத்தை தொடர உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment