திருச்சியில் இருந்து இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலிக்குச் சுற்றுலா சென்ற தனியார் பள்ளி மாணவ - மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்புடன், இருப்பதாக பள்ளி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
திருச்சி காட்டூர் தனியார் பள்ளியில் இருந்து மாணவிகள் 8 பேர், மாணவர்கள் 23 பேர் மற்றும் பள்ளியின் முதல்வர் சூசைராஜ், துணை முதல்வர் ஜார்ஜ் பெர்னான்டஸ் உட்பட ஆசிரியர்கள் 9 பேர் என மொத்தம் 40 பேர், திருச்சியில் இருந்து செப்.20-ம் தேதி புறப்பட்டு, டெல்லி வழியாக செப்.22-ம் தேதி அதிகாலை இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலியைச் சென்றடைந்தனர்.
இந்தநிலையில், செப்.22-ம் தேதி முதல் இமாச்சலப் பிரதேசத்தில் மழை பெய்யத் தொடங்கியது. குலு மாவட்டத்தில் உள்ள பியாஸ் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக குலு, மணாலி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெரும் நிலச்சரிவு, மண் அரிப்பு நேரிட்டு பல்வேறு சாலைகள் சேதமடைந்து, போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால், திருச்சியில் இருந்து மணாலி சுற்றுலா சென்றுள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெளியே வர முடியாமல் தங்கும் அறையிலேயே முடங்கினர்.
இதனிடையே, மணாலி சுற்றுலா சென்றுள்ள தனியார் பள்ளி மாணவர்கள் மழை - வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் பரவின.இதையடுத்து, சுற்றுலா சென்றுள்ள மாணவர்களின் பாதுகாப்பை பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து, சுற்றுலா சென்றுள்ள அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி தெரிவித்தார்.
இதனிடையே, மாணவ- மாணவிகளுடன் மணாலி சென்றுள்ள பள்ளியின் துணை முதல்வர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் ‘இந்து தமிழ் திசை’-யிடம் கூறியது:
“டெல்லியில் இருந்து பேருந்தில் புறப்பட்டு செப்.22-ம் தேதி அதிகாலை மணாலியை வந்தடைந்தோம். அன்று இங்கு மழை பெய்யத் தொடங்கியது. பலத்த மழை காரணமாக நிலச்சரிவு நேரிட்டு பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து, வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், அனைவரும் அறைகளிலேயே தங்கியுள்ளோம். தங்குமிடத்தில் மாணவ - மாணவிகள், ஆசிரியர்கள் என யாருக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. அனைவரும் பாதுகாப்புடன், நலமுடன் உள்ளோம். உணவு, குடிநீர் தடையின்றி கிடைக்கின்றன. எனவே, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
இங்குள்ள ஆட்சியர், எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம். அப்போது, குலுவிலிருந்து டெல்லி செல்லும் சாலை வாகனப் போக்குவரத்துக்கு தயாராக இருப்பதாகவும், மணாலியில் இருந்து குலு செல்லும் சாலை இன்னும் சீரமைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். தற்போது மணாலியில் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஓரிரு நாளில் நிலச்சரிவால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டவுடன், எங்களுக்கு முன்னுரிமை அளித்து அனுப்பிவைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்” என்றார்
No comments:
Post a Comment