ஆதார் எண் அவசியமா இல்லையா என்பது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், ` அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும்’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
உச்சநீதிமன்றம்
அரசின் நலத்திட்ட உதவிகள் முதல் அனைத்து அடிப்படை வசதிகள் பெறுவதற்கும் ஆதார் அவசியம் என மத்திய அரசால் கூறப்பட்டது. மேலும், தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து, ஆதார் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது, தனிமனித உரிமை மீறும் செயல் என்று கூறி ஆதாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. முன்னதாக இந்த வழக்கை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி மனித உரிமை என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. எனவே, இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து, ஆதாரை அனுமதிப்பதா இல்லையா என்பதுகுறித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், இதன் இறுதித் தீர்ப்பு இன்று வெளியாகும் எனக் கூறப்பட்டது. அதன்படி, இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. இரண்டு நீதிபதிகள் தனித்தனியாக தங்களின் கருத்தைத் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த மூன்று நீதிபதிகளின் தீர்ப்புதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மூன்று நீதிபதிகள் சார்பாக மூத்த நீதிபதி ஏ.கே சிக்ரி தீர்ப்பை வாசித்தார்.
அதில், ‘ஆதார் மற்ற அடையாள அட்டைகளைப் போல இல்லாமல் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆதார் எண்ணைப் போலியாக உருவாக்க முடியாது. அது ஒரு தனி நபரின் அடையாளம். எனவே, அடையாளத்துக்கு ஆதார் கட்டாயம். குறைந்த அத்தியாவசியத் தகவல்கள் மட்டுமே ஆதாருக்காகப் பெறப்படுகின்றன. ஆதார் தகவல்கள் திருடப்படுவதால்தான் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதுதான் தற்போது பிரச்னையாக உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்மூலம் தனிநபரின் கண்ணியம் காக்கப்படும். ஆதாருக்கான சட்ட விதிகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். ஆதாருக்கான சட்ட விதிகளின்படி இதுவரை சேகரிக்கப்பட்ட மக்களின் தகவல்கள் கசிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது அரசின் முக்கியப் பொறுப்பு. கையெழுத்திலிருந்து கைரேகை வைக்கும் நிலைக்குத் தொழில்நுட்பம் நம்மை மாற்றியுள்ளது. கையெழுத்தைக்கூட மாற்றலாம். ஆனால், ஒருவரின் தனிப்பட்ட கைரேகையை மாற்ற முடியாது. எனவே, அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும்’ என தீர்ப்பு வழங்கினார்.
எங்கு ஆதார் தேவை, தேவையில்லை என்ற விவரங்களும் கூறப்பட்டன. அவை பின்வருமாறு:
* தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்ட விரோதம்.
* நீட், சி.பி.எஸ்.இ தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது.
* பள்ளி சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் இல்லை.
* வங்கிக் கணக்கு மற்றும் தொலைபேசி எண் இணைப்புக்கு ஆதார் எண் கட்டாயமில்லை.
* ஆதார் இல்லை என்பதற்காக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், தனி நபர் உரிமைகள் மறுக்கப்படக் கூடாது.
* பான் அட்டை பெற ஆதார் எண் கட்டாயம்.
* வருமான வரி தாக்கல்செய்ய ஆதார் அவசியம்.
No comments:
Post a Comment