முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம்.
தலைசிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசளித்து மத்திய- மாநில அரசுகள் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. ஒரு நாட்டில் தலைசிறந்த கல்வி உருவாக ஆசிரியர்களே அடிப்படை காரணம் என்பதை உணர்ந்து, நல்ல ஆசிரியர்கள் யார் என்பதை பலர் விவாதிக்கின்றனர்.
அமெரிக்காவின், ஃபிலடெல்ஃபியாவில் தலைமை விஞ்ஞான ஆணையம் ஒன்றை நிறுவிய கிரிஸ் லெஹ்மான் எனும் ஆய்வாளர், எனது அனுபவத்தில் பல மணி நேரம் வகுப்பறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை சந்தித்துள்ளேன். தாங்கள் கற்பிக்கும் பாடங்களில் மிகப்பெரிய நிபுணர்கள் அவர்கள். ஆனால், அவர்களின் பாட போதனை மிகப் பெரிய வெற்றியை அடையவில்லை. அதே வேளையில், சில ஆசிரியர்களிடம் வகுப்புக்குப் போகும் ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் ஒரு புதிய பாடத்தைக் கொடுத்து, அதை அவர்கள் படித்துவிட்டு, வகுப்பில் ஒரு மணி நேரம் பாடம் நடத்தி, அதைக் கற்ற மாணவர்கள் சிறப்பாக அவற்றை புரிந்து கொண்டதையும் பார்த்திருக்கிறேன் எனக் கூறுகிறார்.
ஒரு தரமான ஆசிரியரின் குணாதிசயங்கள் எவை என அலசுகிறார் அவர்.
1. வகுப்பறையில் மாணவர்களின் இருக்கைகளுக்கும் நடுவில் நடந்து பாடங்களை போதிக்கும் ஆசிரியர்கள் உண்டு. அவர்களது உணர்ச்சிபூர்வமான போதனை மாணவர்களை அமைதியுடன் அமர்ந்து கவனிக்க வைக்கும்.
2. சில ஆசிரியர்களை நாம் கேள்விகள் கேட்டு அவர்களின் கல்வித்தகுதியை ஆராய்ந்து சிறந்த பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கிறோம். பின், அவர்களின் வகுப்பில் பயிலும் மாணவர்களை உற்று நோக்கினால், அவர்கள் பயம் கலந்த பணிவுடன் வகுப்பறையில் பாடம் கேட்க உட்கார்ந்திருப்பது தெரிய வரும். இது நல்ல ஆசிரியரின் தகுதி அல்ல.
3. கடினமான பாடங்களை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பாடம் நடத்தும் சிறந்த ஆசிரியர்கள், அப்பாடங்களை மிகுந்த விருப்பத்துடன் கற்றுத் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். பெளதிகம், கால்குலஸ் போன்ற கடினமான விஞ்ஞான பாடங்களை விருப்பத்துடன் கற்று ஆசிரியரானவர்களே அவற்றை விருப்பத்துடன் மாணவர்களைக் கற்கச் செய்ய முடியும்.
4. பள்ளியில் மாணவர்களுடன் விளையாட்டு மைதானங்களிலும், பள்ளி சிற்றுண்டிக் கூடத்திலும் கலந்துரையாடி வகுப்பறைகளில் போதிப்பதை விடவும் எளிய புரிதல்களை உருவாக்குவார்கள் நல்ல ஆசிரியர்கள். இவை பாடப் புத்தகங்களுக்கும் வெளியே உருவாகும் படிப்பினைகள் எனப்படும்.
5. மாணவர்களுக்குப் பாடத்தையும், நல்ல நடத்தையையும் ஆசிரியர்கள் கற்பிப்பது போல், மாணவர்களுடன் நல்ல முறையில் உறவாடி அவர்களின் நடத்தைகளை புரிந்து கொள்பவர்களே நல்லாசிரியர்கள்.
6. மாணவர்களுக்குப் பாடங்களை போதிப்பதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை செலவிட்டாலே போதும் என்று நினைக்கும் ஆசிரியர்களை விடவும், அந்த நேரத்திற்கும் மேல் மாணவர்களின் கற்றலுக்காக பணி செய்பவர்களே நல்லாசிரியர்கள்.
7. மாணவர்களைத் தேர்வுக்குத் தயார் செய்தபின் அவர்களில் சிலர் தேர்வில் வெற்றியடையாமல் போனால், அதற்கு அவர்கள் சரியான முறையில் கற்கவில்லை என்று மாணவர்கள் மீது குறை கூறாமல், தனது கற்பித்தலிலும் குறை உள்ளதோ என அலசும் குணமுடையவர்களே நல்லாசிரியர்கள்.
8. வகுப்பில் கற்பிப்பது முதல் மாணவர்கள் எழுதுவது வரையான எல்லா நடவடிக்கைகளையும் கட்டுக்கோப்பான முறையில் கற்றுக் கொடுப்பார்கள். இந்தக் கட்டுக்கோப்பு மாணவர்களின் வாழ்வில் எல்லா நடவடிக்கைகளிலும் பரவும் என்பதைப் புரிந்து செயல்படுபவர்களே நல்லாசிரியர்கள்.
9. சிறந்த ஆசிரியர்களாக இருப்பவர்கள், அதைவிட சிறந்தவர்களாக வளரத் தேவையானது அவர்கள் நிறைய புதிய பாடங்களையும் ஆராய்ச்சி கட்டுரைகளையும் தொடர்ந்து கற்கும் மன நிலையே.
10. ஆசிரியர் பணியில் ஏற்படும் பிரச்னைகளால் மனம் தளர்ந்து மாணவர்களுக்கு பாடம் போதிப்பதில் சோர்வடையாமல் இருக்க வேண்டியது நல்லாசிரியர்களுக்கு தேவையான குணாதிசயம்.
11. ஒரு பள்ளி ஆசிரியர், தனது மாணவன் ஒருவன் அதிக சிரத்தையுடன் பாடத்தைப் புரிந்து கடினமான ஒரு கேள்வியை எழுப்பினால், அதனால் கோபமடையவோ, சோர்வடையவோ கூடாது. மகிழ்ச்சியுடன் அந்த மாணவரை பாராட்டும் குணமுடையவரே நல்லாசிரியர்.
12. நல்லாசிரியர்கள், தாங்கள் வகுப்பில் பாடம் நடத்தும்போது எல்லா கதவுகளையும் திறந்து வைத்து, சக ஆசிரியர்களும், பிற வகுப்பு மாணவர்களும் பாடம் போதிக்கும் தங்கள் திறமையை தெரிந்து கொள்வதை வெறுக்க மாட்டார்கள். இது அந்த ஆசிரியர்களின் தன்னம்பிக்கையை உணர்த்தும்.
மேலே பட்டியலிட்ட 12 குணாதிசயங்ககள் மட்டுமல்ல. இன்னும் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களின் நடத்தைகள் விவாதிக்கப்படுகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த நாவலாசிரியரான ஷெர்வுட் ஆண்டர்சன் கூறுகிறார் : கல்வியின் ஒரே குறிக்கோள் மாணவனின் எண்ணத்தை மேம்படுத்துவதுதான். கல்வி கற்ற மனிதனின் எண்ணம் திறமையுடன் வேலை செய்யும். அமெரிக்கப் பள்ளி, கல்லூரிகளின் கல்வி இந்தக் குறிக்கோளின்படி செயல்படுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனின் செயலாளர் ஹென்றி கிஸிங்கர் புகழ்பெற்ற நிர்வாகி. அவர் தனது உதவியாளரிடம் ஒரு செய்தியைக் கூறி அதுபற்றி அறிக்கை ஒன்றைத் தயார் செய்யும்படி கூறினார். அவரும் அறிக்கையைத் தயார் செய்து கிஸிங்கருக்கு அனுப்பியுள்ளார். அந்த அறிக்கை சரியாக இல்லை என உடனடியாக உதவியாளருக்குத் திருப்பி அனுப்பப்பட்டு விட்டது.
தனது அறிக்கை சரியில்லை என கிஸிங்கர் கூறியதால் துயரமடைந்த உதவியாளர், அந்த அறிக்கையை சீரமைத்து அனுப்பி வைத்தார். அதுவும் சரியானதாக இல்லை எனத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. பின் தனது எல்லா வேலைகளையும் விட்டு விட்டு இரவில் நிறைய நேரத்தை செலவு செய்து மூன்றாம் முறையாக அந்த அறிக்கையைத் தயார் செய்து, கிஸிங்கரிடம் நேரில் சென்று அளித்துள்ளார்.
அப்போது, ஐயா, நான் மூன்றாவது முறையாக இந்த அறிக்கையைத் தயாரித்து அளிக்கிறேன். இதுவும் சரியில்லை என நீங்கள் முடிவு செய்தால் நான் இந்த வேலைக்குத் தகுதியில்லாதவனாகி விடுவேன். பணியிலிருந்து என்னை விடுவித்து விடுங்கள் எனக் கூறியுள்ளார்.
அதைக் கேட்ட கிஸ்ஸிங்கர் புன்னகையுடன், நான் இதுவரை உங்கள் அறிக்கையை ஒரு முறை கூட படிக்கவில்லை. இந்த அறிக்கை மிக நன்றாகவே இருக்கும். ஒரு மாணவன் ஒரு வேலையை அதிக கவனத்துடன் செய்ய ஆசிரியர் அவனுக்கு அழுத்தம் கொடுப்பார். அந்த அழுத்தத்தினால் அவன் மிகவும் அக்கறையுடனும் கவனத்துடனும் அந்த வேலையைச் செய்வான் எனக் கூறியுள்ளார்.
அப்படியே நம் நாட்டிற்கு வந்து நிலைமையை கவனிப்போம். நமது பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள் சங்கம் அமைத்து போராடுவதையும், மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்காத நிலையையும் காண்கிறோம். முற்காலங்களில், நல்லாசிரியர்களின் குணாதிசயங்களுடன் தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் விளங்கினார்கள்.
முன்பெல்லாம், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்கச் செல்லும் நம் மாணவர்களுக்கு, அங்குள்ள பேராசிரியர்கள் நல்ல வரவேற்பளித்தனர். அவர்கள் மெட்ராஸ் பல்கலைக்கழகம் என அறிந்தவுடன் அது தரமானது என அவர்கள் கூறுவதுண்டு.
தமிழகத்தில் ஒரே ஒரு பல்கலைக்கழகம் அன்று இருந்தது. தற்போது நிறைய பல்கலைக்கழகங்கள் உருவாகியுள்ளன. கல்வி விற்கப்படும் நிலை உள்ளது. இந்த நிலைமையில் தரமான ஆசிரியர்களை உருவாக்குவது எப்படி?
ஒரு நாட்டின் கல்வியின் தரம் உயர, அடிப்படைத் தேவை நல்லாசிரியர்களே. நம் நாட்டில் 15 லட்சம் பள்ளிகளும், 37,204 கல்லூரிகளும், 677 பல்கலைக்கழகங்களும் இயங்குவதாக 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியான மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சக அறிக்கை கூறுகிறது. இவற்றில், 85 லட்சத்து 61 ஆயிரத்து 764 பள்ளி ஆசிரியர்களும், 13 லட்சத்து 19 ஆயிரத்து 295 கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களும் வேலை செய்கின்றனர். இந்த ஆசிரியர்களும், பேராசிரியர்களும்தான் நமது முன்னேற்றத்திற்கு அடிப்படை.
சிங்கப்பூர், பின்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் பட்டதாரிகளின் முதல் விருப்பம் ஆசிரியப் பணியில் சேருவதே. அதனால்தான் அந்நாடுகள் மிகச்சிறந்த வளர்ச்சியடைந்துள்ளன. ஆனால், நம் நாட்டின் நிலைமை தலைகீழ்.
இங்கே வேறு வேலை எதுவும் கிடைக்காவிட்டால் ஆசிரியர் வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். ஆண்டுக்கு 215 நாள் வேலை, வாரத்தில் அதிகபட்சம் 10 மணி நேரம்தான் வேலை என ஆசிரியர்கள் நினைப்பதும் மற்றவர்கள் கூறுவதும் உண்மையே.
இந்த நிலைமை, அடியோடு மாற வேண்டும். அதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்.
கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).
No comments:
Post a Comment