கல்வித்துறையில் தமிழக அரசு அறிவிக்கும் சில திட்டங்கள், ஆரம்பத்தில் ஜோராக இருக்கும். நாளடைவில் அந்த திட்டம் காணாமலே போகும். நடமாடும் அறிவியல் வாகனத்துக்கு அடுத்தபடியாக, இந்த வரிசையில் இப்போது நடமாடும் உளவியல் மையமும் சேர்ந்துள்ளது. இந்த திட்டங்களுக்கு உயிர் கொடுப்பது குறித்து, கல்வி அதிகாரிகளுக்கு துளியும் அக்கறை கிடையாது. மாணவர் நலனில் எவருக்கும், அக்கறை கிடையாது என்பதையே, இது உணர்த்துகிறது.
பள்ளிகளுக்கு நேரடியாக சென்று, மாணவர்களுக்கு, கவுன்சிலிங் அளிக்கும் வகையில், 2014ல், நடமாடும் உளவியல் மையம் அறிமுகம் செய்யப்பட்டது.மொத்தம், 17 உளவியல் ஆலோசகர்களே இருப்பதால், தற்போது இரு மாவட்டங்களுக்கு, ஒரு மையம் வீதமே உள்ளது. வாகனம் இயக்க ஓட்டுனர் நியமிக்காததால், கோவை உட்பட பல மாவட்டங்களில், இவ்வாகனம் பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக பள்ளிகளுக்கு 'விசிட்' அடிக்க முடியவில்லை என்கின்றனர், உளவியல் ஆலோசகர்கள். கோவை மாவட்டத்தில், பெரும்பாலான பள்ளிகளுக்கு இவ்வாகனம் சென்றதே இல்லை.
பாடத்திட்ட அழுத்தம், பொதுத்தேர்வு முறைகளில் ஏற்பட்டுள்ள குழப்பம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பயம் காரணமாக, மாணவர்கள் கடும் மன அழுத்தத்தில் உள்ளனர்.பதின்பருவ மாற்றங்கள், குடும்ப சூழலால் படிப்பில் கவனம் செலுத்தாத மாணவர்களை, கண்டிக்க கூட முடியாத சூழலில், ஆசிரியர்கள் உள்ளனர். ஆகவே, மாவட்டத்துக்கு ஒரு உளவியல் ஆலோசகரை நியமிக்க வேண்டும்; அத்துடன், தனியாக ஓட்டுனர் ஒருவரையும் நியமிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு மன அழுத்தம்!
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில்,'கவுன்சிலிங் என்பது அறிவியல் ரீதியாக, பிரச்னைகளின் தன்மை அறிந்து, ஆற்றுப்படுத்துவது ஆகும். ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளால், மேலும் அழுத்தத்துக்கு ஆட்பட்டு, மாணவர்கள் தற்கொலை உள்ளிட்ட தவறான முடிவுகளை எடுத்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே, மாணவர்களின் மன அழுத்தம் குறைக்க, கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்
No comments:
Post a Comment